மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி
கோத்தகிரியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கோத்தகிரி,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி தொடங்கி வைத்தார். காமராஜர் சதுக்கத்தில் இருந்து ராம்சந்த் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் காமராஜர் சதுக்கத்தில் வரை பேரணி சென்றது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சீருடை, பை, காலணிகள் உள்ளிட்ட திட்டங்கள், விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.75 ஆயிரம் உதவித்தொகை, நீட் தேர்வில் 7.5 சதவீத ஒதுக்கீடு ஆகிய சலுகைகள் கிடைக்கும் என்பது குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இதில் வட்டார கல்வி அலுவலர்கள் பாலமுருகன், சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.