தீண்டாமை குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


தீண்டாமை குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

பள்ளியில் காலை உணவை சாப்பிட மறுத்த விவகாரம்: தீண்டாமை குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பட்டியலினப் பெண் சமைத்த உணவை உட்கொள்ள மாணவர்கள் மறுப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வேதனை அளிக்கின்றன.

பெற்றோர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, குழந்தைகள் காலை உணவை தவிர்த்துள்ளனர். பெற்றோருக்கும், சமையலருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினைகள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து இந்த சிக்கலுக்கு முடிவு காணப்பட்டிருப்பது மகிழ்ச்சியும், நிம்மதியும் அளிக்கிறது என்றாலும் கூட, உணவில் தீண்டாமை என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எனவே, உணவில் தீண்டாமை போன்ற குற்றங்கள் குறித்து மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைவரும் சமம் என்ற உணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பட்டியலின மக்களை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story