பள்ளி மாணவிகளுக்கு நாடகம் மூலம் விழிப்புணர்வு
விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவிகளுக்கு நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஊட்டி,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டம் 63 சதவீத வனப்பகுதியாகவும், வன உயிரினங்கள், பறவைகள் வாழும் பகுதியாகவும் உள்ளது. இந்தநிலையில் சுற்றுச்சூழல் மாசுபடாமலும், இயற்கையை பாதிக்காமலும், தீ விபத்து இல்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தீயணைப்பு துறையினர் நடத்தி வருகின்றனர். ஊட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று பள்ளி மாணவிளுக்கு தீ விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து ஊட்டி தீயணைப்புத்துைற சார்பில், நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது பட்டாசு வெடிக்கும் போது அருகே வாளியில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, சிறுவர்கள் பெரியவர்கள் முன்னிலையில் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு எதிர்கொள்வது, உடனடியாக சிகிச்சை அளிப்பது குறித்து நாடகம் மூலம் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார், ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் வீரர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.