விபத்து வீடியோக்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு
பழனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், விபத்து வீடியோக்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பழனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை விதிகள் குறித்தும், விபத்து இல்லா சூழலை உருவாக்கவும் புதுமுயற்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது அலுவலக வளாகத்தில் மக்கள் காத்திருக்கும் இடத்தில் டி.வி வைக்கப்பட்டு, அதில் விபத்து பற்றிய வீடியோக்கள் காண்பிக்கப்படுகிறது. குறிப்பாக விபத்து ஏற்படும் விதம், அதனை எவ்வாறு தடுக்கலாம், சாலை விதிகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து வீடியோ காட்சிகள் ஒளிபரப்பாகிறது. இதை ஓட்டுனர் உரிமம் பெற வரும் மக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி கூறும்போது, சாலை விபத்துகள் மூலம் தினமும் ஏராளமானோர் உயிர் இழக்கின்றனர். விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது சாலை விதி மீறல் தான். வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் மக்கள் காத்திருக்கும் நேரத்தில் விபத்து பற்றி வீடியோ காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என முடிவு செய்தோம். அதன்படி சாலை விபத்து ஏற்பட்டபோது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காண்பித்தும், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்றார்.