அரசு காப்பக மாணவிகளுக்கான விழிப்புணர்வு சுற்றுலா பயணம்
ராமநாதபுரத்தில் அரசு காப்பக மாணவிகளுக்கான விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
சுற்றுலா பயணம்
ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் அரசின் அன்னை சத்யா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கான விழிப்புணர்வு சுற்றுலா பயண தொடக்க விழா ராமநாதபுரத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், மாணவிகளின் விழிப்புணர்வு சுற்றுலா பயண பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்ததாவது:- சுற்றுலா துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு பொதுஅறிவு, அறிவியல் மற்றும் வரலாற்று சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டு வருகிறது.
40 மாணவிகள்
ஆதரவற்ற குழந்தைகள் மனசோர்வில் இருந்து விடுபட்டு, புத்துணர்ச்சியுடன் படிக்கவும், வரலாற்று சிறப்புகளை நேரடியாக சென்று பார்த்து தெரிந்து கொள்ளும் வகையிலும் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு காலாண்டு தேர்வு விடுமுறையையொட்டி மாணவிகளுக்கான சுற்றுலா பயணம் அழைத்து செல்லப்படுகிறது.
இதில் அரசு அன்னை சத்யா காப்பகத்திலுள்ள 40 மாணவிகள் சுற்றுலாவில் பங்கேற்கின்றனர். இந்த மாணவிகள் ராமநாதபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மன்னர்கள் வசித்த அரண்மனை பகுதியை பார்வையிட்டு, தொடர்ந்து உலக புகழ் பெற்ற கீழடி அருங்காட்சியத்திற்கு சென்று தொன்மை வாய்ந்த வரலாற்று சிறப்புகளை பார்வையிட்டு வர உள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அலுவலர் அருண் பிரசாத், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்திய நாராயணன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், யூனியன் தலைவர்கள் ராமநாதபுரம் பிரபாகரன், திருப்புல்லாணி புல்லாணி, மண்டபம் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.