மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்


மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
x

வேலூரில் பொதுமக்கள் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

வேலூர்

விழிப்புணர்வு ஊர்வலம்

வேலூர் மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் கோட்டை காந்திசிலை அருகே நடந்தது.

வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் ரத்தினசாமி, மாசுகட்டுப்பாடு வாரிய பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் அண்ணாசாலையில் வந்த வாகன ஓட்டிகளுக்கு மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பூமி, சுற்றுச்சூழலை பாதுகாப்போம்

வேலூர் கோட்டை காந்திசிலை அருகே இருந்து தொடங்கிய ஊர்வலம் மக்கான் சிக்னல், அண்ணாசாலை, தெற்கு போலீஸ் நிலையம் சிக்னல் வழியாக சென்று பெரியார் பூங்கா அருகே நிறைவடைந்தது.

இதில், மாநகராட்சி ஊழியர்கள், தனியார் தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் தவிர்ப்போம் பூமி, சுற்றுச்சூழலை பாதுகாப்போம், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பையை பயன்படுத்துங்கள் போன்ற பதாகைகள், மஞ்சப்பையை கைகளில் ஏந்தியடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

முன்னதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், உதவி கமிஷனர் செந்தில்குமரன், மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர்கள் சுஷ்மிதா, சவுந்தர்யா, உதவிமேலாளர் பிரசாத், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story