தூத்துக்குடியில் ஜூபிளி விழாவை முன்னிட்டு அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தினர் விழிப்புணர்வு நடைபயணம்
தூத்துக்குடியில் ஜூபிளி விழாவை முன்னிட்டு அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தினர் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நேற்று காலை நடந்தது.
பேட்டி
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் டி.ஆர்.தமிழரசு நேற்று முன்தினம் சங்க அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் 40-வது ஆண்டு ரூபி ஜூபிளி விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் எனது (தமிழரசு) தலைமையில் நடக்கிறது. விழாக்குழு தலைவர் ஜோபிரகாஷ் வரவேற்று பேசுகிறார். விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி, கலந்து கொண்டு அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் உருவாவதற்கு காரணமானவர்களை கவுரவிக்கிறார். தொடர்ந்து சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சங்கத்தின் 40 ஆண்டுகால நிகழ்வுகள் அடங்கிய புத்தகத்தை வெளியிடுகிறார். விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணன், ஸ்பிக் முழுநேர இயக்குனர் ராமகிருஷ்ணன், டி.சி.டபிள்யூ மூத்த செயல் துணைத்தலைவர் சீனிவாசன், என்.இ.பி.சி.அனல்மின்நிலைய நரேந்திரா, இன்டர்ஸ்நாக் காஷ்யூ இந்தியா நிறுவன நிதி இயக்குனர் ராமபிரியன், அகில இந்திய வர்த்தக தொழில் சங்க முன்னாள் தலைவர்கள் ஜோவில்லவராயர், மணி, உதயசங்கர், வேல்சங்கர், ஜோபிரகாஷ் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர் என்று கூறினார்.
நடைபயணம்
இந்த நிலையில் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க ஜூபிளி விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் நேற்று ஆரோக்கியமான தொழில் அதிபர், ஆரோக்கியான தொழில் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் பூங்கா முன்பு இருந்து தொடங்கிய நடைபயணத்துக்கு சங்கத்தின் தலைவர் டி.ஆர்.தமிழரசு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சங்கர் மாரிமுத்து, விழாக்குழுத் தலைவர் ஜி.பி.ஜோ பிரகாஷ் உள்ளிட்ட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். நடைபயணம் பாளையங்கோட்டை ரோடு, குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு, பழைய மாநகராட்சி, வ.உ.சி சாலை வழியாக தூத்துக்குடி பழைய துறைமுகம் முன்பு முடிவடைந்தது. நடைபயணத்தின் போது சாலையோரம் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.