பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் விழிப்புணர்வு கூட்டம்
நீடாமங்கலம் அருகே பெரியக்கோட்டையில் பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் வேளாண்மைக்கோட்டம் பெரியக்கோட்டை கிராமத்தில் பாசனமேலாண்மை நவீனமயமாக்கல் திட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நீர் நுட்ப மையம் மற்றும் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக, தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டமானது உலக வங்கி நிதி உதவியுடன் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் பெரியக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் சந்திராஅன்பழகன் தலைமை தாங்கினார். நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வை. ராதாகிருஷ்ணன் வேளாண்மை அறிவியல் நிலைய செயல்பாடுகள் குறித்து பேசினாா். மேலும் வேளாண்மை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டது.விஞ்ஞானி து. பெரியார் ராமசாமி இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்படுத்தப்படும் விதம் குறித்து பேசினாா். இத்திட்டத்தில் நானோ யூரியா பயன்பாடு, நீர்ப்பாசன முறை, நேரடி நெல் விதைப்பு, பயறு வகை பயிர்களில் விதை உற்பத்தி மற்றும் சாகுபடி, நிலக்கடலையில் தெளிப்பு நீர் பாசன விவசாய தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை உழவர்கள் பயன்படுத்தி தங்கள் வருவாயை பெருக்கிக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கூறினர்.