வியக்க வைக்கும் விருப்பாட்சி தலையூத்து அருவி சுற்றுலா தலமாகுமா?


வியக்க வைக்கும் விருப்பாட்சி தலையூத்து அருவி சுற்றுலா தலமாகுமா?
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வியக்க வைக்கும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக அறிவித்து, போதிய அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்பது உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

திண்டுக்கல்

இயற்கை வளமும், வனமும் நிறைந்த மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். விண்ணோடு மோத துடிக்கும் முகடுகளை கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைகள் இயற்கை அரணாக அமைந்தது மற்றொரு சிறப்பு ஆகும்.

அறியப்படாத சுற்றுலா தலம்

மலைகளின் இளவரசி எனும் கொடைக்கானல் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் எழில் கொஞ்சம் பசுமைக்கு பஞ்சம் இல்லை. கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க உலகம் முழுவதில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர்.

கொடைக்கானல் அழகை அனுபவித்து ரசித்த சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருக்கும். இந்த கொடைக்கானல் மட்டுமின்றி ஏராளமான இடங்கள் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற வகையில் இருக்கின்றன. அதில் அறியப்படாத சுற்றுலா தலங்கள் ஏராளம். மலைகள் நிறைந்து இருப்பதால் அருவிகளும், ஆறுகளும் இங்கு அதிகமாக இருக்கின்றன.

தலையூத்து அருவி

வெள்ளியை உருக்கி மலை உச்சியில் இருந்து ஊற்றியது போன்று பாயும் அருவிகள், அருவிகளின் மடியில் அமைந்த தடாகம் போன்றவை சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும். இத்தகைய சிறப்புமிக்க அருவிகளில் விருப்பாட்சி தலையூத்து அருவியும் முக்கியமானது. ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியில் இந்த தலையூத்து அருவி அமைந்துள்ளது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் இருக்கும் விருப்பாட்சிக்கு சென்று பின்னர் அங்கிருந்து 2 கி.மீ. தூரம் விவசாய தோட்டங்களுக்கு நடுவே பயணம் செய்தால் தலையூத்து அருவியை சென்றடையலாம். அருவிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் ஓங்கி உயர்ந்த தென்னை மரங்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

வடகாடு மலைப்பகுதி, பரப்பலாறு அணையில் இருந்து அருவிக்கு தண்ணீர் வருகிறது. இதனால் ஆண்டில் பெரும்பாலான நாட்கள் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம். காதை துளைக்கும் ஓசையுடன் பல அடி உயரத்தில் இருந்து தடாகத்தில் தண்ணீர் விழுவது கண்களை கொள்ளை கொள்ளும் காட்சி ஆகும். அதோடு நிற்காமல் நங்காஞ்சி ஆறாக பாய்ந்து நீர்வழியை தொடங்கி விவசாயத்துக்கும் பயன்படுகிறது. இந்த தலையூத்து அருவியின் அழகை பார்த்து ரசிக்க ஒருசில சுற்றுலா பயணிகளே வருகின்றனர். அதுவும் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விடுமுறை நாட்களில் மட்டும் தான் மக்கள் வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள்

இதற்கு தடாகத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி இல்லை என்பதே காரணம். இதனால் ஆசை, ஆசையாக விருப்பாட்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியின் அழகை மட்டுமே ரசித்துவிட்டு செல்லும் நிலை உள்ளது. இந்த தடாகத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட இதர வசதிகளை ஏற்படுத்தினால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்.

எனவே வியக்க வைக்கும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக அறிவித்து, போதிய அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்பது உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:-

தொழில் வளர்ச்சி

ராமச்சந்திரன் (விவசாயி) :- 365 நாட்களிலும் தண்ணீர் கொட்டும் சிறப்பு கொண்டது தலையூத்து அருவி. கரையோரம் சிவன், பெருமாள் கோவில் உள்ளதால் விசேஷ நாட்களில் மட்டும் பக்தர்கள் வருகின்றனர். ஆனால் அருவி பகுதியில் பாதுகாப்பான முறையில் குளிக்கும் வசதி செய்து சுற்றுலா தலமாக அறிவித்தால் விருப்பாட்சி பகுதியில் சுற்றுலா மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் வளர்ச்சி பெறும்.

கார்த்திகேயன் (சமூக ஆர்வலர்) :- விருப்பாட்சி பகுதியைப் பொறுத்தவரை விவசாயம் சார்ந்த பகுதியாகும். அதேபோல் பழனிக்கு வரும் பக்தர்களை நம்பியே ஓட்டல் போன்ற தொழில்கள் நடைபெறுகிறது. எனவே தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக அறிவித்து போதிய வசதிகள் செய்து கொடுத்தால் உள்ளூர் மக்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதேபோல் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாவுக்காக இங்கு வருவார்கள். இதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story