அம்மாபேட்டை அருகே சுற்றுலா வந்தபோது பரிதாபம் வேன் மீது அரசு பஸ் மோதல்; பட்டதாரி வாலிபர் பலி
வேன் மீது அரசு பஸ் மோதல்; பட்டதாரி வாலிபர் பலி
அம்மாபேட்டை அருகே சுற்றுலா வந்தபோது வேன் மீது அரசு பஸ் மோதிக்கொண்ட விபத்தில் பட்டதாாி வாலிபா் இறந்தாா். 3 போ் படுகாயம் அடைந்தனா்.
சுற்றுலா சென்றனர்
சென்னையில் இருந்து கோவைக்கு 14 பேர் கொண்ட குழுவினர் வேனில் சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கிருந்து வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுவிட்டு் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தனர். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த குதிரைகல்மேடு பெட்ரோல் பங்க் அருகே நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது மேட்டூரில் இருந்து பவானி நோக்கி வந்த அரசு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா வேனின் பின் பக்கத்தில் மோதியது. இதில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளே இருந்த சென்னை ஆண்டாள்குப்பம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான டில்லி என்பவர் மகன் ராஜேஷ்குமார் (வயது 26), கருணாநிதி மகன் பிரபு, முருகன் மகன் ரூபன்குமார், சுப்பிரமணியம் மகன் சந்தோஷ் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பட்டதாரி வாலிபர் சாவு
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜேஷ்குமார் (26) நேற்று காலை இறந்தார்.
படுகாயமடைந்த மற்ற 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ராஜேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.