சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் ஆயந்தூர் ரெயில் நிலையம்
சமூக விரோதிகளின் கூடாரமாக ஆயந்தூர் ரெயில் நிலையம் மாறி வருவதால் பயணிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ளது ஆயந்தூர் கிராமம். இங்குள்ள ரெயில் நிலையத்தின் வழியாக தினமும் காலை 6 மணிக்கும், மாலை 5.45 மணிக்கும் விழுப்புரம்- திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும், இரவு 7.20 மணிக்கு விழுப்புரம்- காட்பாடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் சென்று வருகிறது. இதுதவிர மன்னார்குடி- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (புதன், வெள்ளி, திங்கள்), ராமேஸ்வரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் (வெள்ளி, சனி, திங்கள்), விழுப்புரம்- காரக்பூர் எக்ஸ்பிரஸ் (செவ்வாய், புதன், சனி), புதுச்சேரி- தாதர் எக்ஸ்பிரஸ் (ஞாயிறு, செவ்வாய், புதன்), புதுச்சேரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் (புதன் மட்டும்) ஆகிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆயந்தூர் ரெயில் நிலையம் வழியாக சென்று வருகின்றன. மற்ற ரெயில் நிலையங்களை காட்டிலும் இங்குள்ள ஆயந்தூர் ரெயில் நிலையம் வழியாக செல்லக்கூடிய ரெயில் போக்குவரத்து என்பது குறைவாகவே உள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லை
இதன் காரணமாக இங்குள்ள ரெயில் நிலையத்தை சம்பந்தப்பட்ட ரெயில்வே நிர்வாகம் சரிவர பராமரிப்பதில்லை. அதுபோல் இங்கு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக ஆயந்தூர் ரெயில் நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பிடம், தரமான இருக்கை வசதிகள் இப்படி பயணிகளுக்கு தேவையான எந்தவொரு அடிப்படை வசதிகளுமே இல்லை. இங்குள்ள நடைமேடைகளில் குடிநீர் குழாய்கள் வசதி இருந்தும் அதிலிருந்து குடிநீர் வருவதில்லை. சில இடங்களில் குடிநீர் குழாய்களும் உடைந்து சேதமடைந்தவாறு இருக்கிறது. அதுபோல் கழிவறை கட்டிடம் இருந்தும் அவை பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது. நடைமேடைகளில் பயணிகள் அமருவதற்காக அமைக்கப்பட்டிருந்த இருக்கை வசதிகளும் உடைந்து சேதமடைந்து இருக்கிறது.இவ்வாறு எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமலும், முறையான பராமரிப்பு இல்லாமலும் இந்த ரெயில் நிலையம் காணப்படுவதால் இங்கு ரெயில் பயணத்திற்காக வரக்கூடிய பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் பராமரிப்பின்றி காணப்படும் இந்த ரெயில் நிலைய நடைமேடைகளில் ஆங்காங்கே எருக்கஞ்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் ரெயிலில் இருந்து இறங்கி ஏறும்போது, பயணிகள் பல்வேறு பரிதவிப்புக்கு ஆளாகின்றனர். புதர்கள்போல் மண்டிக்கிடக்கும் எருக்கஞ் செடியால், ரெயில் நிலைய நடைமேடையில் உள்ள சிமெண்ட் சிலாப்புகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி அங்குள்ள நடைமேடையில் புற்களும் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. இதனால் இந்த ரெயில் நிலையம் காடுபோல் காட்சியளிக்கிறது. பயணிகள் சிலர், அவசர அவசரமாக ரெயிலை பிடிக்க நடந்து செல்லும்போது கீழே விழுந்து காயமடையும் நிலை அடிக்கடி ஏற்படுகிறது.
சமூகவிரோதிகள் அட்டகாசம்
மேலும் இந்த ரெயில் நிலையம் பராமரிப்பின்றி இருப்பதை சமூகவிரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றனர். ரெயில் போக்குவரத்து இல்லாத சமயங்களில் சமூகவிரோதிகள் பலர், ரெயில் நிலைய நடைமேடைகளில் அமர்ந்து மது அருந்துவது, சூதாடுவது போன்ற பலவித சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஆயந்தூர் ரெயில் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள் பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர்.
ஆகவே இந்த ரெயில் நிலைய நடைமேடையில் புதர்கள்போல் மண்டிக்கிடக்கும் எருக்கஞ்செடியை அகற்றி, சிதிலமடைந்த நடைமேடையை சீரமைத்தும், பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். அதேபோல் பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி இங்கு அவ்வப்போது ரெயில்வே போலீசாரும் மற்றும் உள்ளூர் போலீசாரும் ரோந்து சுற்றி வர வேண்டும் என பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.