ஆயிரத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்


ஆயிரத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

ஆயிரத்தம்மன் கோவில்

நெல்லை மாவட்டத்தில் தசராவுக்கு பெயர் பெற்றது பாளையங்கோட்டையாகும். இங்குள்ள 12 அம்மன் கோவில்களில் ஆயிரத்தம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

இதையொட்டி கடந்த 22-ந்தேதி காலையில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், மகாசங்கல்பம், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், ருத்ர ஹோமம், துர்கா ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. இதைத்தொடர்ந்து கும்ப அலங்காரம் நடந்தது. இரவில் முதல் கால யாகசாலை பூஜை, சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை, மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை, இரவு 11 மணிக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடந்தது.

கும்பாபிஷேகம்

நேற்று அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, 4-30 மணிக்கு மூர்த்திகளுக்கு ரக்‌ஷா பந்தனம், நாடி சந்தானம், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. காலை 6-30 மணிக்கு விமானம், ஆயிரத்தம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மேளதாளம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து ஆயிரத்தம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும், மகேஸ்வர பூஜையும் நடந்தது. இதைத்தொடர்ந்து ஆயிரத்தம்மன், தேவி முத்தாரம்மன், தூத்துவாரியம்மன், யாதவர் உச்சிமாகாளியம்மன், முப்புடாதிஅம்மன், விஷ்வகர்மா உச்சிமாகாளி அம்மன் ஆகிய அம்மன்களுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் ராஜகோபால சுவாமி கோவில் திடலில் அன்னதானம் நடந்தது. இரவில் ஆயிரத்தம்மன், தேவி முத்தாரம்மன், தூத்துவாரியம்மன், யாதவர் உச்சிமாகாளியம்மன், முப்புடாதிஅம்மன், விஷ்வகர்மா உச்சிமாகாளி அம்மன்கள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story