திற்பரப்பு அருவியில் உற்சாக குளியலிட்ட அய்யப்ப பக்தர்கள்
திற்பரப்பு அருவியில் உற்சாக குளியலிட்ட அய்யப்ப பக்தர்கள்
திருவட்டார்:
குமரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவியும் ஒன்றாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு திற்பரப்பில் அருவியாக பாய்கிறது. இங்கு ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் கொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டு முறை தடை விதிக்கப்பட்டது.
கடந்த வாரம் மழை குறைந்ததை அடுத்து தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், கோதையாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து அருவியில் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது. தற்போது சபரிமலைக்கு சென்று வரும் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் திற்பரப்புக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அதன்படி நேற்றும் காலை முதலே கூட்டம் களை கட்டியது. அவ்வாறு வருகை தந்த பக்தர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர், அவர்கள் அருகில் உள்ள மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசித்து விட்டு செல்கின்றனர்.