சுருளி அருவியில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்
சுருளி அருவியில் அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கம்பம் அருேக உள்ள சுருளி அருவியும் ஒன்றாகும். இது, புண்ணியதலமாகவும் விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த மலைப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து அருவியாக கொட்டுகிறது. இங்கு குளித்தால் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
இதனால் சுருளி அருவியில் குளிப்பதற்காக தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினந்தோறும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறுவதால் தமிழகத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். குறிப்பாக சபரிமலைக்கு செல்லும் வெளி மாவட்ட பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக அதிக அளவில் சென்று வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் சுருளி அருவியில் புனித நீராடி விட்டு சபரிமலைக்கு செல்வது வழக்கம். இதனால் நேற்று சுருளி அருவியில் அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் வரிசையில் நின்று உற்சாகமாக நீராடி சென்றனர்.