மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்


மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலைக்கு செல்லும், அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

தேனி

அய்யப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதம் பிறந்து விட்டால் அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சென்று வருவது வழக்கம்.

அதன்படி தேனி மாவட்டத்தில் அய்யப்ப பக்தர்கள் நேற்று கார்த்திகை மாத பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதற்காக கோவில்களில் அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். கோவில்களில் அதிகாலையில் இருந்தே அய்யப்ப பக்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தன.

விரதம் தொடக்கம்

தேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் பக்தர்கள் பலர் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவில், தீர்த்தத்தொட்டி முருகன் கோவில், சுருளிப்பட்டி அய்யப்பன் கோவில் உள்பட மாவட்டத்தில் பல இடங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்தனர். சிறுவர், சிறுமிகளையும் பெற்றோர்கள் அழைத்து வந்து மாலை அணிந்தனர். இதற்காக கோவில்கள் அருகில் துளசி மாலை, ருத்ராட்சம் மாலை விற்பனையும் களை கட்டியது.

அதுபோல் பழனி முருகன் கோவிலுக்கு செல்வதற்காகவும் பக்தர்கள் பலர் நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர். பக்தர்கள் பலரும் முன்பதிவு செய்து வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

பக்தர்கள் கருத்து

இது தொடர்பாக பக்தர்கள் சிலர் கூறியதாவது:-

மணிமுத்து (தேனி) :- நான் பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறேன். 25 ஆண்டுகளுக்கும் மேல் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று வருகிறேன். பாதயாத்திரை, பெரும்பாதை, வாகனம் என அனைத்து வழிகளிலும் சென்று வந்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வரும்போது உற்சாகமாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. மனம் நிம்மதியாக இருக்கிறது. எத்தனை முறை சென்றாலும் அய்யப்பனை காணும் போது உடல் சிலிர்க்கும். 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தன. தற்போது பல்வேறு தளர்வுகள் இருக்கிறது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

செல்லம் (உப்புக்கோட்டை) :- நான் கட்டுமான ஒப்பந்த பணிகள் செய்து வருகிறேன். எனக்கு ஆண் குழந்தை பிறந்தால் சபரிமலைக்கு மாலை அணிந்து வருவதாக வேண்டினேன். மகன் பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் மாலை அணிந்து 12 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருகிறேன். முன்பு கூட்டம் அதிகம் இருந்தாலும் நடைதிறக்கப்பட்ட நாட்களில் சென்று வரலாம். இப்போது முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. கிராமப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்களுக்கு இது சிரமத்தை கொடுக்கிறது. முன்பதிவு செய்து சென்றாலும் கூட்டம் அதிக அளவில் தான் இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story