குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. அருவிகளில் பக்தர்கள் ஆனந்தமாக நீராடி விட்டு சென்றனர்
குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. அருவிகளில் பக்தர்கள் ஆனந்தமாக நீராடி விட்டு சென்றனர்.
அய்யப்ப பக்தர்கள் கூட்டம்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த சீசனின்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். இடையிடையே இதமான வெயில் அடிக்கும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும்.
இதன்பிறகு வடகிழக்கு பருவமழை பெய்யும் மாதங்களிலும் குற்றாலத்தில் தண்ணீர் கொட்டும். இந்த சமயத்தில் தென்காசி வழியாக சபரிமலைக்கு செல்லும் பெரும்பாலான அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்து குளித்துவிட்டு செல்வார்கள்.
அருவிகளில் குவிந்தனர்
அதன்படி கடந்த கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் குற்றாலத்திற்கு அய்யப்ப பக்தர்கள் வருகை தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தற்போது அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கன மழையினால் தற்போது குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் விழுகிறது. குற்றாலம் வரும் அய்யப்ப பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அருவிகளில் ஆனந்தமாக குளித்து செல்கிறார்கள்.
இதேபோல் நேற்றும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் அருவிகளுக்கு வந்தனர். இதனால் அருவிகளில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அந்த பக்தர்கள் அருவிகளில் ஆனந்தமாக நீராடி விட்டு சென்றனர்.
சாமி தரிசனம்
குற்றாலம் வரும் அய்யப்ப பக்தர்களில் பலர் தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவிலுக்கும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இதனால் குற்றாலம் மற்றும் தென்காசி பகுதிகளில் அய்யப்ப பக்தர்களின் கூட்டத்தை அதிகமாக காண முடிகிறது. அதிகமான வாகன போக்குவரத்தும் உள்ளது.
தற்போது சீசன் சமயம் போன்று கூட்டம் உள்ளது. எனவே, மெயின் அருவிக்கரை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் பொதுமக்கள் தெரிவித்தனர்.