மாலை அணிந்து, விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்


மாலை அணிந்து, விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
x

மாலை அணிந்து, அய்யப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினார்கள்.

திருச்சி

அய்யப்பன் கோவில்

கார்த்திகை மாதம் நேற்று பிறந்தது. இதையொட்டி சபரிமலையில் நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. நேற்று சபரிமலையில் மண்டல பூஜை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் அய்யப்ப பக்தர்கள் நேற்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதனால் கோவில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதில் திருச்சி கண்டோன்மெண்ட் அய்யப்பன் கோவில், ஜங்ஷன் வழிவிடுவேல்முருகன் கோவில் என்று பல்வேறு கோவில்களில் பக்தர்கள் குருசாமியிடமும், கோவில் குருக்களிடமும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

சரண கோஷம்

அப்போது, சாமியே... சரணம் அய்யப்பா... என்று சரணகோஷம் முழங்க அவர்கள் மாலை அணிந்தனர். மேலும் கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலில் மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர் சன்னதியில் நேற்று காலை முதல் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கினர். இதற்காக நேற்று அதிகாலை எழுந்து காவிரி ஆற்றில் குளித்து விட்டு கோவிலுக்கு துளசிமணி மாலை, ருத்ராட்சமாலை கொண்டு வந்து சாமி கும்பிட்டுவிட்டு குருக்கள் கைகளால் மாலையை அணிந்து கொண்டனர்.

தா.பேட்டை, திருவெறும்பூர்

தா.பேட்டையில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைவான பக்தர்கள் மாலை அணிந்து கோவிலுக்கு சென்றனர். ஆனால் கட்டுப்பாடுகள் இல்லாததால் இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்தனர்.

திருவெறும்பூர் அருகே பாய்லர் வளாகத்தில் உள்ள திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டுக்கு உட்பட்ட அய்யப்பன் கோவிலில் நேற்று அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய இயலாமல் இருந்தது. இந்த ஆண்டு அந்த பாக்கியம் எங்களுக்கு கிடைத்துள்ளது, என்றனர்.

அன்னதானம்

திருச்சி மாவட்ட அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் தை மாதம் 1-ந் தேதி வரை 60 நாட்கள் திருச்சி வழியாக சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு அம்மா மண்டபம் சாலையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதைெயாட்டி நேற்று அன்னதானம் தொடங்கி வைக்கப்பட்டது.


Next Story