மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக, கார்த்திகை மாதத்தின் முதல் நாளான நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் அய்யப்ப பக்தர்கள் கோவிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.
மாலை அணிந்த பக்தர்கள்
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதற்காக கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள். அதிகாலையிலேயே புனித நீராடி கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவிலில் நேற்று ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள். அய்யப்பன் கோவிலில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதிகாலை முதல் அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குருசாமிகள் பக்தர்களுக்்கு மாலை அணிவித்தார்கள். இதையொட்டி அய்யப்பன் கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.
48 நாட்கள் விரதம்
திருப்பூர் ஈஸ்வரன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், வாலிபாளையம் முருகன் கோவில், கொங்கணகிரி முருகன் கோவில், அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள். முதல்முறையாக சபரிமலைக்கு செல்லும் கன்னி சாமிகளும் மாலை அணிவித்து விரதம் மேற்கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள். கொரோனா ஊரடங்குக்கு பிறகு இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு இருப்பதால் அய்யப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் ஆர்வமுடன் மாலை அணிந்தனர். மாலை அணிந்த பக்தர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலை செல்ல உள்ளனர்.