அம்மா உணவகத்தில் உணவுகள் தரமாக இல்லை அய்யப்பன் எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு
அம்மா உணவகத்தில் உணவுகள் தரமாக இல்லை என அய்யப்பன் எம்.எல்.ஏ.குற்றம் சாட்டியுள்ளார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் சகுந்தலா கட்டபொம்மன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய், துணை தலைவர் தேன்மொழி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், உசிலம்பட்டி நகர் பகுதியில் தற்போது வரை ஏற்கனவே போடப்பட்ட சாலைகள்தான் புதுப்பிக்கப்பட்டுள்ளது. விரிவாக்க பகுதிகளில் புதிதாக எந்த சாலையும் அமைக்கப்படவில்லை. மழை காலம் நெருங்கி வருவதால் புதிய சாலைகளை அமைக்க வேண்டும். மேலும் உசிலம்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் உணவுகள் தரமற்ற முறையில் உள்ளது. ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளிகள் தினசரி வந்து சாப்பிட்டு விட்டு செல்லும் அம்மா உணவகத்தில் உணவு தரமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். புதிய பஸ் நிலைய கட்டமைப்பு பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டம் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும், தற்போது வரை உசிலம்பட்டி பகுதிக்கு தண்ணீர் வழங்கவில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டம், தற்போது சோதனை ஓட்டம் மட்டுமே நடைபெற்று வருகிறது. அதை விரைந்து முடித்து அனைத்து பகுதி மக்களுக்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என்றார்.