சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை ரூ.8 லட்சத்துக்கு விற்பனை; 5 பேர் கைது


சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை ரூ.8 லட்சத்துக்கு விற்பனை; 5 பேர் கைது
x

பேரையூர் அருகே சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை ரூ.8 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து முடித்த 17 வயது சிறுமி, வாலிபர் ஒருவரின் தொடர்பால் கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அன்று அந்த சிறுமி பேரையூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் சிறுமியும், ஆண் குழந்தையும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சிறுமி, குழந்தையுடன் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார்.

போலீசில் புகார்

இந்த தகவல் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த நர்ஸ் காந்திமதிக்கு தெரிந்ததால் அவர் சிறுமியிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அந்த நர்ஸ் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு சிறுமி குழந்தை என்னிடம் இல்லை என் தாயாரிடம் கொடுத்து விட்டேன் என்று கூறினார். மேலும் குழந்தை குறித்த தகவலை முன்னுக்கு பின் முரணாக சிறுமி தெரிவித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த காந்திமதி பேரையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். குழந்தையை காணவில்லை என்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குழந்தை வேறு யாருக்கும் விற்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் குழந்தையை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ரூ.8 லட்சத்துக்கு விற்பனை

இந்த நிலையில் சிறுமியின் தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் தனது நண்பரான மெய்யனூத்தம்பட்டியை சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 48) என்பவரிடம் குழந்தையை கொடுத்ததாக கூறினார். சுந்தரலிங்கம் குழந்தையை விற்பதற்காக உசிலம்பட்டியை சேர்ந்த வக்கீல் ஒருவரிடம் கொடுத்துள்ளார்.

அவர் ஈரோடு பெரியபுலியூத்தை சேர்ந்த கார்த்திக் (28) என்பவரிடம் குழந்தையை தந்துள்ளார். அவர் பெங்களூருவில் வசிக்கும் கார்த்திக் (50) மற்றும் சீனிவாசனிடம் (38) குழந்தை விற்க கொடுத்துள்ளார். இருவரும் குழந்தையை பெங்களூருவில் வசிக்கும் தேஜஸ்வரி (36) என்ற பெண்ணிடம் ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.

தேஜஸ்வரிக்கு பெண் குழந்தை ஒன்று ஏற்கனவே உள்ளது. ஆண் குழந்தை இல்லாததால் விலை கொடுத்து பச்சிளங்குழந்தையை வாங்கி உள்ளார். தேஜஸ்வரி சிறிது பார்வை குறைபாடு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 பேர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாயார், சுந்தரலிங்கம், தேஜஸ்வரி, பெங்களூரு கார்த்திக், சீனிவாசன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story