குட்டி யானையின் உடல் தோண்டி எடுப்புயின் உடல் தோண்டி எடுப்பு


குட்டி யானையின் உடல் தோண்டி எடுப்புயின் உடல் தோண்டி எடுப்பு
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை அருகே மின்வேலியில் சிக்கி இறந்த குட்டி யானையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இது தொடர்பாக தந்தை, 2 மகன்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

ராயக்கோட்டை அருகே மின்வேலியில் சிக்கி இறந்த குட்டி யானையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இது தொடர்பாக தந்தை, 2 மகன்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காப்புக்காடு பகுதியில் யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதியையொட்டி உள்ள அக்குபாய் கொட்டாயை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 63). விவசாயி. இவர் தனது நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தார். அந்த நிலத்தில் அடிக்கடி காட்டு பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் நிலத்தை சுற்றிலும் எல்லப்பன் மின்வேலி அமைத்து இருந்தார்.

இந்த நிலையில் அந்த நிலத்திற்கு வந்த யானைகள் கூட்டத்தில் குட்டி யானை ஒன்று மின்வேலியில் சிக்கி இறந்தது. இதையறிந்த எல்லப்பன் தனது மகன்களுடன் சேர்ந்து குழி தோண்டி யானையை புதைத்தார். இந்த தகவல் பொதுமக்களுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் நேற்று முன்தினம் அங்கு சென்றனர்.

பொக்லைன் மூலம் தோண்டி எடுப்பு

அப்போது இரவு நேரமாகி விட்டதால் யானையின் உடலை தோண்டி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று காலை அங்கு ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தலைமையில், ஓசூர் கோட்ட உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன், வனச்சரக அலுவலர்கள் பார்த்தசாரதி (ராயக்கோட்டை), ரவி (ஓசூர்) மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர்.

அதேபோல கோவையில் இருந்து சிறப்பு வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினரும் அங்கு வந்தனர். தொடர்ந்து பொக்லைன் மூலம் குழி தோண்டப்பட்டது. கிரேன் மூலமாக யானையின் உடல் கட்டப்பட்டு மேலே தூக்கப்பட்டது.

3 பேர் கைது

பின்னர் யானையின் உடலை அந்த இடத்திலேயே மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த பிரேத பரிசோதனையின் முடிவில் யானை மின்வேலியில் சிக்கி இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து யானையின் உடல் அந்த இடத்திலேயே மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து மின்வேலி அமைத்து யானையை கொன்ற குற்றத்திற்காகவும், யானையின் உடலை புதைத்து தடயத்தை அழித்த குற்றத்திற்காகவும், விவசாயி எல்லப்பன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது மகன்கள் முனிராஜ் (38), சுப்பிரமணி (28) ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

தும்பிக்கையில் காயம்

இதுகுறித்து வன காப்பாளர் கார்த்திகேயனி கூறுகையில், 'இறந்த யானை 4 வயதுடையது. அதன் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மின்வேலியை யானை கடக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. யானை தந்தத்திற்காகவோ, வேறு எதற்காகவும் கொலை செய்யப்படவில்லை. கடந்த 14-ந் தேதி அதிகாலை யானைகள் கூட்டம் அங்கு வந்துள்ளது. அப்போது மின்வேலியில் சிக்கி யானை இறந்துள்ளது. அடுத்த நாள் (15-ந் தேதி) யானையை அருகிலேயே குழி தோண்டி புதைத்துள்ளனர். இது தொடர்பாக தந்தை, மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.


Next Story