மோர்தானா அணையில் இறந்து கிடந்த குட்டி யானை
மோர்தானா அணையில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. அதனை பரிசலில் சென்று மீட்டனர்.
துர்நாற்றம் வீசியது
தமிழக- ஆந்திர எல்லையோரம் சைனகுண்டா மற்றும் மோர்தானா கிராமங்கள் உள்ளன. இதனையடுத்து உள்ள ஆந்திர மாநில வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள 40-க்கும் மேற்பட்ட யானைகள் பல குழுக்களாக பிரிந்து அடிக்கடி தமிழகம் மற்றும் ஆந்திர வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
தற்போது மோர்தானா அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளது. மோர்தானா அணையின் கடைசி பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக மறுபக்கத்திற்கு செல்லும். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மோர்தானா கிராமத்தை சேர்ந்த சிலர் ஆடு, மாடுகளை மேய்த்து விட்டு வீடுகளுக்கு ஓட்டி வந்தனர். அப்போது அணைப்பகுதியில் துர்நாற்றம் வீசி உள்ளது.
செத்து மிதந்த குட்டி யானை
அந்தப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அணையின் கரை பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்து தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. இது குறித்து வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர், அந்தப்பகுதி கிராம மக்கள், நீர் பாசனத்துறை ஊழியர்கள், யானை இறந்து கிடந்த பகுதிக்கு செல்ல முயன்றனர்.
அப்போது சற்று தொலைவில் யானைகள் கூட்டம் இருப்பது தெரியவந்தது. அதனால் வனத்துறையினர் திரும்பி வந்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை வேலூர் மண்டல வனப்பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் கலாநிதி ஆகியோர் உத்தரவின் பேரில் உதவி வனப் பாதுகாவலர் மணிவண்ணன் தலைமையில், குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா உள்ளிட்ட வனத்துறையினர், மோர்தானா ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன், கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ் ஆகியோர் சென்று பார்த்தபோது குட்டி யானை ஒன்று இறந்து சில நாட்கள் ஆன நிலையில் தண்ணீரில் கரை ஒதுங்கி இருப்பது தெரியவந்தது.
பரிசலில் சென்று...
குட்டியாைனயின் உடல் கரையிலிருந்து சற்று தொலைவில் தண்ணீரில் மிதந்தது. வனத்துறையினர், கிராம மக்கள் உள்பட 25 பேருக்கும் அதிகமானோர் பரிசலில் சென்று வலையில் கட்டி குட்டியானை உடலை கரைக்கு கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த குட்டி யானையை கால்நடை மருத்துவர்கள் கொட்டமிட்டா எம்.பி.ரமேஷ்பாபு, கல்லப்பாடி என்.ரமேஷ்குமார், பரதராமி எம்.முருகேசன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மோர்தானா கரைப்பகுதியிலேயே உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் குட்டி யானை உடலை வலையால் கட்டி, பொக்லைன் எந்திரம் மூலம் தோன்டிய பள்ளத்தில் அடக்கம் செய்தனர்.
குட்டி யானை இறந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், இறந்த ஆண் குட்டி யானைக்கு சுமார் இரண்டு வயது இருக்கும். ஒரு வாரத்திற்கு முன்பாக மோர்தானா பகுதியில் பல கிலோமீட்டர் தொலைவில் தண்ணீர் குடிக்க இறங்கியபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் அல்லது சேற்றில் சிக்கி இறந்திருக்கலாம். ஒரு வாரம் ஆனதால் கரை ஒதுங்கி உள்ளது என தெரிவித்தனர்.