ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட பெண் குழந்தை திருச்சி காப்பகத்தில் ஒப்படைப்பு
ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட பெண் குழந்தையை 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து மீட்ட போலீசாருக்கு பாராட்டு குவிகிறது. இதனிடையே மீட்கப்பட்ட குழந்தை திருச்சி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட பெண் குழந்தையை 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து மீட்ட போலீசாருக்கு பாராட்டு குவிகிறது. இதனிடையே மீட்கப்பட்ட குழந்தை திருச்சி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
6 பேர் கைது
லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஜானகி (வயது 32). திருமணமாகாத இவர் ஒருவரிடம் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்றார்.
பின்னர் இந்த குழந்தை விற்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜானகி, லால்குடி அருகே உள்ள அரியூர் கிராமத்தை சேர்ந்த வக்கீல் பிரபு (42), அவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளி (38), மணக்கால் சூசையபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (35), திருச்சியை சேர்ந்த புரோக்கர் கவிதா, ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கருத்துரை கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மனைவி சண்முகப்பிரியா உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
டெல்லி விரைந்த தனிப்படை
இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய பல்வேறு கட்ட விசாரணையில் ஜானகியின் குழந்தை விற்பனையில் டெல்லியை சேர்ந்த குழந்தை விற்பனை கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தனிப்படையைச் சேர்ந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் அபுதாலி, பிரெட்ரிக், செயலரசு ஆகியோர் கடந்த 11-ந்தேதி காரில் ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் வழியாக டெல்லி சென்றனர். பின்னர் அங்கு 3 நாட்கள் தங்கி விசாரணை நடத்தினர். பின்னர் டெல்லி போலீஸ் உதவியுடன் அங்கே பதுங்கி இருந்த டெல்லியை சேர்ந்த குழந்தை விற்பனை கும்பல் தலைவன் கோபிநாத் என்கிற கோபி கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் குழந்தையை கர்நாடக மாநிலம் வெள்ளக்கவி மாவட்டம், உத்யம்பாக் போலீஸ் சரகம் ஜன்னமா நகரை சேர்ந்த பாக்கியஸ்ரீ என்ற பெண்ணிடம் ரூ.5 லட்சத்துக்கு விற்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து கர்நாடகா வந்த தனிப்படை போலீசார் குழந்தையை மீட்டனர்.
பாராட்டு
இந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தையை நேற்று மாலை தனிப்படை போலீசார் திருச்சிக்கு கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அந்த குழந்தையை குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினரிடம் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஒப்படைத்தார். மேலும் சிறப்பாக பணியற்றிய லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் மற்றும் தனிப்படையினரை பாராட்டினார்.
சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் காரில் பயணம் செய்து, டெல்லியில் நிலவும் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் குழந்தையை பத்திரமாக மீட்ட தனிப்படை போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சமயபுரத்தைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தனிப்படை போலீசாருக்கு செல்போன் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர்களின் பணியை பாராட்டி சமயபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசாரை வாழ்த்தி சுவரொட்டி ஒட்டிஉள்ளனர்.