ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட பெண் குழந்தை கர்நாடகாவில் மீட்பு


ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட பெண் குழந்தை கர்நாடகாவில் மீட்பு
x
திருச்சி

லால்குடியில் ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட பெண் குழந்தை கர்நாடகாவில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

திருமணம் ஆகாமல் கர்ப்பம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஜானகி (வயது 32). இவர் திருமணம் ஆகாமல் ஒருவரிடம் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பம் ஆனார். இதனால் அவர் அந்த கர்ப்பத்தை கலைக்க லால்குடி அருகே உள்ள அரியூர் கிராமத்தை சேர்ந்த வக்கீல் பிரபு (42), அவரது 2-வது மனைவி சண்முகவள்ளி (38) ஆகியோரை அணுகி ஆலோசனை கேட்டுள்ளார்.

இதனிடையே கருவளர்ந்து 7 மாதங்களுக்கு மேலாகி விட்டதால் கருவை கலைக்க முடியவில்லை. இந்தநிலையில், ஜானகிக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை நாங்கள் விற்றுதருகிறோம் என்று கூறி பிரபுவும், சண்முகவள்ளியும் குழந்தையை ஜானகியிடம் இருந்து வாங்கினர்.

குழந்தை விற்பனை

பின்னர் மணக்கால் சூசையாபுரம் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் (35), திருச்சியை சேர்ந்த புரோக்கர் கவிதா ஆகியோர் உதவியுடன் குழந்தையை ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா கருத்துரை கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மனைவி சண்முகபிரியா என்பவரிடம் ரூ.3½ லட்சத்துக்கு விற்றுள்ளனர்.

இந்தநிலையில் பிரபு, சண்முகவள்ளி ஆகியோர் ஜானகியிடம், உனது குழந்தை ரூ.1 லட்சத்துக்குதான் விற்பனை ஆகியுள்ளது, இதில் ரூ.20 ஆயிரத்தை நாங்கள் வைத்துக்கொள்கிறோம். ரூ.80 ஆயிரத்தை நீ வைத்துக்கொள் என்று கூறிஉள்ளனர். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட ஜானகி, அதனை செலவு செய்து விட்டார்.

ஏமாற்றியதால் புகார்

இந்த நிலையில் தனது குழந்தையை ரூ.3½ லட்சத்துக்கு விற்றுவிட்டு, ரூ.80 ஆயிரம் மட்டுமே கொடுத்து தன்னை ஏமாற்றிய தகவல் ஜானகிக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஜானகி தனது குழந்தையை பிரபுவும், சண்முகவள்ளியும் கடத்தி சென்றுவிட்டனர் என திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜானகி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ஜானகியின் ஒப்புதலுடன்தான் பிரபு, சண்முகவள்ளி, ஆகாஷ், சண்முகபிரியா, கவிதா ஆகியோர் குழந்தையை விற்றது தெரியவந்தது. ஆனால் ஜானகி குழந்தையை விற்ற தகவலை மறைத்து நாடகமாடி போலீசில் புகார் செய்தது தெரியவந்தது.

6 பேர் கைது

இதைத்தொடர்ந்து ஜானகி உள்பட 6 பேரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு லால்குடி போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட சண்முக பிரியா ஈரோட்டில் கருமுட்டை விற்பனை செய்த கும்பலுடன் தொடர்புடையவர் எனவும் தெரியவந்தது.

இந்த நிலையில் ஜானகியின் குழந்தை என்ன ஆனது என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து சண்முகபிரியாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் ஜானகியின் குழந்தை புதுடெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

கர்நாடகாவில் மீட்பு

இதைத்தொடர்ந்து குழந்தையை மீட்பதற்காக லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் புதுடெல்லி சென்று முகாமிட்டு குழந்தையை பற்றி ரகசியமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், புதுடெல்லியை சேர்ந்த கோபிநாத் என்கிற கோபிகிருஷ்ணன் என்பவரிடம் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் வெள்ளகவி மாவட்டம் உத்யம்பாக் போலீஸ் சரகம் ஜன்னமா நகரை சேர்ந்த பாக்கியஸ்ரீ என்ற பெண்ணிடம் ரூ.5 லட்சத்துக்கு குழந்தையை விற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த குழந்தையை கர்நாடகாவில் இருந்து மீட்டு டெல்லியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், புதுடெல்லி போலீசார் அனுமதியுடன் குழந்தையை திருச்சி கொண்டுவர லால்குடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி புதுடெல்லியில் கைது செய்யப்பட்ட கோபிநாத், குழந்தையை வாங்கிய பாக்கியஸ்ரீ ஆகியோர் வருகிற 22-ந்தேதி திருச்சி அழைத்துவரப்பட்டு திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story