தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்


தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
x
திருப்பூர்

தாராபுரம்:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 3-ந் தேதி தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க ேமாதிரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கயல்விழி கூறியுள்ளார்.

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நலத்திட்ட உதவிகள்

தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி பிறந்த நாள் வரும் ஜூன் 3-ந் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எனது ஏற்பாட்டில் தொகுதி முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் அன்றைய தினம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் (ஜூன் 3-ந்தேதி ) பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், காலை 10.30 மணிக்கு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள உள்நோயாளிகள் 99 பேருக்கு ஹார்லிக்ஸ், ரொட்டி மற்றும் பழங்கள் வழங்கப்படுகிறது.

பொன்னாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 99 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படுகிறது. தாராபுரம் பொள்ளாச்சி ரோடு பெஸ்ட் நகரில் வசிக்கும் 99 நரிக்குறவர் குடும்பங்களுக்கு மளிகை பொருட்களும், கொளத்துப்பாளையம் பேரூராட்சி காந்திஜி நகரில் உள்ள 99 முதியோர்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தென்னை மரக்கன்றுகள்

குண்டடம் ஒன்றியம் சடையபாளையம் ஊராட்சியில் 99 விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. கெத்தல்ரேவ் அரசு உயர்நிலைப்பள்ளியில் 99 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மூலனூர் ஊராட்சி ஒன்றியம் குமாரபாளையம் ஊராட்சி வடுகபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 99 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் மூலனூர் பேரூராட்சி மேட்டுவலசு ஆதிதிராவிடர் காலனி மற்றும் கன்னிவாடி பேரூராட்சி கன்னிவாடியில் வசிக்கும் 99 முதியோர்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்குகிறார். இதில் தாராபுரம் நகர செயலாளர் கே.எஸ். தனசேகரன், குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய செயலாளருமான எஸ்.வி.செந்தில்குமார், மூலனூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார்.


Next Story