பிற்படுத்தப்பட்டோர் சலவையகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்


தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் சலவையகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சலவையகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சலவையகம்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப 10 பேரை கொண்டு ஒரு குழுவாக அமைத்து நவீன சலவையகம் புதிதாக ஏற்படுத்த அரசு ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த சலவையகம் அமைக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். உறுப்பினர்களது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சிபெற்ற நபர்களை கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

புதிய நவீன சலவையகம் தொடங்க ஆர்வமாக உள்ள சலவைத் தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மக்கள், குழுவாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story