பிற்படுத்தப்பட்டோர்-சீர்மரபினர் தொழில் தொடங்க கடனுதவி
பிற்படுத்தப்பட்டோர்-சீர்மரபினர் தொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்பட உள்ளது என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு தொழில் தொடங்க கடன் வழங்கப்படுகிறது. இதில், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மேலும் 18 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் இருப்பது அவசியம். இதில் பொதுகால, தனிநபர் கடன் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கான ஆண்டு வட்டி 6 சதவீதம் முதல் 8 சதவீதம் ஆகும். பெண்களுக்கு புதிய பொற்கால கடன் திட்டத்தில் 5 சதவீத வட்டியில் ரூ.2 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சிறுகடன் திட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினருக்கு ரூ.1 லட்சமும், குழுவுக்கு ரூ.15 லட்சமும் 4 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.
இதற்கு மகளிர் சுயஉதவிக்குழு தொடங்கி 6 மாதங்களாகி, மகளிர் திட்ட அலுவலரால் தரம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக 20 பேர் உறுப்பினர்களாக இருக்கலாம். மேலும் சிறுகடன் திட்டத்தில் சுயஉதவிக்குழுவில் உறுப்பினராக இருக்கும் ஆணுக்கு ரூ.1 லட்சமும், குழுவுக்கு ரூ.15 லட்சமும் 5 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. 20 பேர் உறுப்பினர்களாக இருக்கலாம். இதுதவிர ஒருவருக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பில் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது. எனவே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.