வடிகால் வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம்


வடிகால் வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம்
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் கடைவீதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் கடைவீதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கொள்ளிடம் கடைவீதி

மயிலாடுதுறை மாவட்டத்தின் நுழைவாயில் பகுதியாக கொள்ளிடம் அமைந்துள்ளது. கொள்ளிடம் கடைவீதிக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்து செல்கின்றனர். எப்போதும் மக்கள் அதிகமாக கூடும் பகுதியாக இருந்து வரும் கொள்ளிடம் நாளுக்கு நாள் கடைகள் அதிகரிப்பதால் நகரம் போல் காட்சியளிக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழையால் கொள்ளிடம் கடைத்தெரு மற்றும் அருகில் உள்ள நகர் பகுதிகளில் மழைநீ்ர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழைநீர் வடிய வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் மழை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம்

மேலும் அந்த பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் குப்பைகள், மதுபாட்டில்கள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.இந்த வடிகால் வாய்க்காலில் உள்ள குப்பைகளை அகற்றியும், ஆக்கிரமிப்புகளை அகற்றயும் தூர்வார வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் நெப்போலியன் கூறுகையில், கொள்ளிடம் கடைவீதியையொட்டி, சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் வடிகால் வாய்க்கால் உள்ளது. இது பிரதான தெற்கு ராஜன் வாய்க்காலில் இருந்து பிரிந்து அப்பகுதியில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் வடிகால் வாய்க்காலாகவும் இருந்தது.

தூர்வார வேண்டும்

காலப்போக்கில் இந்த வாய்க்கால் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வடிவதற்கு பல நாட்கள் ஆகிறது.வடிகால் வசதி இல்லாததால் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.இந்த வாய்க்காலில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுகின்றன. அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வாய்க்காலில் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே கொள்ளிடம் கடைத்தெருவில் உள்ள வடிகால் வாய்க்காலில் குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்றார்.


Next Story