ஓடம்போக்கி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம்
திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரடாச்சேரி:
திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓடம்போக்கி ஆறு
திருவாரூர் மாவட்டம் முகுந்தனூர் என்கிற இடத்தில் இருந்து ஓடம்போக்கி ஆறு பிரிகிறது. இந்த ஆறு மூலம் திருவாரூர் மற்றும் நாகை ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வாடிகாலாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் முகுந்தனூர், அம்மையப்பன், திருவாரூர், கேக்கரை, கடாரம்கொண்டான், அலிவலம், அடியக்கமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த ஆற்றின் மூலமாக பாசன வசதி பெற்று வருகின்றன.
கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம்
இந்த நிலையில் இந்த ஆறு திருவாரூர் நகரை கடக்கும் இடத்தில், அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் கழிவுநீர் முழுவதுமாக ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றின் தண்ணீர் மாசடைந்து சாக்கடை போல் மாறி வருகிறது.
இதன் காரணமாக ஆற்று நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த ஆற்றில் குளிப்பவர்களுக்கு தோல் நோய் ஏற்படுகிறது.
தூர்வார வேண்டும்
ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் பாசனத்திற்கு தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால் வயல்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் ஓடம்போக்கி ஆற்றில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றி தூர்வாரி, கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றில் கழிவுநீர் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.