கடற்படை அதிகாரியாக படுகர் இன இளம்பெண் தேர்வு
கொச்சியில் கடற்படை அதிகாரியாக ஊட்டி படுகர் இன இளம்பெண் தேர்வானார். அவருக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.
ஊட்டி,
கொச்சியில் கடற்படை அதிகாரியாக ஊட்டி படுகர் இன இளம்பெண் தேர்வானார். அவருக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.
கடற்படையில் தேர்வு
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே அச்சனக்கல் பகுதியை சோ்ந்தவா் ரவீந்திரநாத். இவரது மனைவி மாலதி. இவர்களது மகள் மீரா (வயது 23). ரவீந்திரநாத் தொழில்நுட்ப நிபுணராக வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரி உள்பட நாட்டின் பல ராணுவ ஆஸ்பத்திரிகளில் பணிபுரிந்து உள்ளார். இதனால் இந்திய ராணுவத்தில் சோ்ந்து பணிபுரிய மீராவுக்கு ஆர்வம் வந்தது. அவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து உள்ளார்.
இதற்கிடையே மீரா கடற்படையில் சேர கடந்த ஆண்டு நுழைவு தேர்வு எழுதினார். இந்த தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து கொல்கத்தாவில் நடந்த தேர்விலும் வெற்றி பெற்றார். இதையடுத்து கேரள மாநிலம் கண்ணூா் அருகே எஜிமாலா கடற்படை தளத்தில் 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சி முடிந்து விட்டதால், அவர் விரைவில் கப்பல் படைக்கு அதிகாரியாக பொறுப்பு ஏற்க உள்ளார்.
பாராட்டு விழா
இந்தநிலையில் பயிற்சியை முடித்து விட்டு மீரா தனது பெற்றோருடன், சொந்த ஊரான அச்சனக்கல்லுக்கு வந்தாா். அங்கு அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதேபோல் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில், மீராவுக்கு பாராட்டு விழா நடந்தது. இதுகுறித்து மீரா கூறும்போது, எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றியதால் எனக்கும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை சிறுவயதில் இருந்தே இருந்தது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தியை முதன்மையாக கொண்டு படித்ததால், பயிற்சி எளிமையாக இருந்தது. தற்போது கடற்படையில் சேர்ந்து உள்ளதால், இதன் மூலம் எனது கனவு நனவாகி உள்ளது. கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் சப்-லெப்டினென்ட் என்ற கடற்படை அதிகாரி பதவி வழங்கப்பட்டு உள்ளது என்றார். கடற்படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட படுகர் இன இளம்பெண் மீராவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.