கைதான பெண் உள்பட 2 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி


கைதான பெண் உள்பட 2 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி
x

இறையூரில் அவதூறு பேச்சு, இரட்டை குவளை முறை தொடர்பான வழக்கில் கைதான பெண் உள்பட 2 பேர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுக்கோட்டை

ஜாமீன் மனு

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் வேங்கைவயல் காலனியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் போது கலெக்டர் கவிதாராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த கிராமத்தில் அய்யனார் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த அனுமதி மறுத்ததாக எழுந்த புகாரின் பேரில் கலெக்டர் கவிதாராமு உடனடியாக பூட்டியிருந்த அந்த கோவிலை திறந்து வழிபாடு நடத்த அனுமதி அளித்தார். அப்போது சாமியாடிய சிங்கம்மாள் என்பவர் அங்கிருந்த பட்டியலின மக்களை அவதூறாக பேசியிருக்கிறார். இது தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்கம்மாளை கைது செய்தனர். இதேபோல அந்த கிராமத்தில் இரட்டை குவளை முறையை கடைபிடித்ததாக டீக்கடை உரிமையாளர் மூக்கையா கைது செய்யப்பட்டார். இந்த 2 பேரும் ஜாமீன் கோரி புதுக்கோட்டையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

கடும் எதிர்ப்பு

இந்நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, கைதான 2 பேருக்கும் ஜாமீன் வழங்க எதிர்தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த கிராமத்தில் பழைய நிலையே தொடருவதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து வக்கீல்கள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்த நீதிபதி (பொறுப்பு) சத்யா உத்தரவிட்டார். அதன்படி வக்கீல்கள் குழுவினர் இறையூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த அறிக்கையை கடந்த 7-ந் தேதி அக்குழுவினர் சமர்ப்பித்தனர். இந்த நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று கோர்ட்டில் நீதிபதி சத்யா முன்னிலையில் வந்தது. அப்போது எதிர்தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, கைதான 2 பேருக்கும் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதாடினர். அதேநேரத்தில் மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்களும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்து ஜாமீன் வழங்க கோரினர். அரசு தரப்பு வக்கீலும் தனது வாதத்தை முன்வைத்தார்.

மனு தள்ளுபடி

வக்கீல்கள் வாதம் முடிவடைந்ததும் மாலையில் மனு மீது உத்தரவிடுவதாக நீதிபதி தெரிவித்தார். அதன்பின் நேற்று மாலையில் 2 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.


Next Story