கைதான பெண் உள்பட 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு
புதுக்கோட்டை அருகே கோவிலில் வழிபாடு, இரட்டை குவளை முறை பிரச்சினை தொடர்பாக கைதான பெண் உள்பட 2 பேருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு வழங்கியும், இறையூர் கிராமத்தில் உண்மை நிலையை கண்டறிய வக்கீல்கள் குழு அமைத்தும் கோர்ட்டு உத்தரவிட்டது.
கோவிலில் வழிபாடு பிரச்சினை
புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் கவிதாராமு மற்றும் போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, அதிகாரிகள் விசாரணை நடத்த அந்த கிராமத்திற்கு சென்றனர்.
அங்கு சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் அங்குள்ள கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பதாக தெரிவித்த புகாரின் அடிப்படையில் அவர்களை சம்பந்தப்பட்ட கோவிலுக்கு கலெக்டர் நேரில் அழைத்து சென்று அந்த கோவிலை திறந்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்க நடவடிக்கை எடுத்தார்.
அப்போது சாமியாடிய சிங்கம்மாள் என்பவர் பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக, அவர் மீது வெள்ளனூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஜாமீன் கோரி மனு
இதேபோல அந்த கிராமத்தில் டீக்கடையில் இரட்டை குவளை முறை பின்பற்றுவதாக வந்த புகாரையடுத்து அந்த கடையின் உரிமையாளர் மூக்கையாவும் கைது செய்யப்பட்டார். கைதானவர்களில் சிங்கம்மாள் திருச்சி மகளிர் சிறையிலும், மூக்கையா புதுக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு புதுக்கோட்டையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதன் நீதிபதியாக மகிளா கோர்ட்டு நீதிபதி சத்யா பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் சிங்கம்மாள், மூக்கையா ஆகியோருக்கு ஜாமீன் வழங்க கோரி அவர்களது தரப்பில் வக்கீல், கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அப்போது எதிர்தரப்பு மற்றும் அரசு தரப்பிலும் வக்கீல்கள் அவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கிராமத்தில் பழைய நிலையே காணப்படுவதாகவும் அவர்களது தரப்பில் எடுத்துரைத்தனர்.
வக்கீல்கள் குழு
இதைத்தொடர்ந்து இறையூர் கிராமத்தில் தற்போதைய உண்மை நிலைய கண்டறிய 2 வக்கீல்கள் கொண்ட குழுவை நியமித்தும், அந்த குழுவினர் நேரடியாக சென்று விசாரணை நடத்தி வருகிற 6-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் படி நீதிபதி கூறினார். மேலும் கைதான 2 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, வழக்கின் விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இந்த குழுவில் பெண் மற்றும் ஆண் வக்கீல் ஒருவர் இடம்பெற்றுள்ளனர். இவர்களோடு வருவாய் கோட்டாட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருப்பதாகவும் வக்கீல்கள் தெரிவித்தனர். இந்த குழுவினர் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தரப்பில் இருந்தும் நாளைக்குள் (வியாழக்கிழமை) அறிக்கை கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.