தூண்டில் வளைவுகள் தரமாக அமைக்கப்படுவது இல்லை


தூண்டில் வளைவுகள் தரமாக அமைக்கப்படுவது இல்லை
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் தூண்டில் வளைவுகள் தரமானதாக அமைக்கப்படுவது இல்லை என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் தூண்டில் வளைவுகள் தரமானதாக அமைக்கப்படுவது இல்லை என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி சிவப்பிரியா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மீனவர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். அதன்பிறகு கூட்டத்தில் மீனவர்களும், மீனவ பிரதிநிதிகளும் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

குளச்சல் மீன்வளத்துறை அலுவலகத்தை தேங்காப்பட்டணத்துக்கு மாற்றக் கூடாது. அதை தூத்தூரில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் தூத்தூரில் தான் அதிக அளவிலான விசைப்படகு மீனவர்கள் உள்ளனர். மேலும் மீனவர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பிறகு தான் அந்த அலுவலகத்தை எங்கு மாற்றுவது என்று முடிவு செய்ய வேண்டும்.

குமரி மாவட்டத்தில் சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வளையை பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள். இதனால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டுப்படகு மீனவர்களுக்கு செயற்கைகோள் தொலைபேசி வழங்க வேண்டும்.

தூண்டில் வளைவுகள்

குளச்சல் முதல் மண்டைக்காடுபுதூர் வரை உள்ள ஏ.வி.எம். கால்வாயை தூர்வாரி குளச்சல் பள்ளிமுக்கில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும். பெரியகாடு மீனவர் கிராமத்தில் போடப்பட்டுள்ள தூண்டில் வளைவை சீரமைத்து 100 மீட்டர் தூரத்திற்கு நீட்டித்து அமைக்க வேண்டும். கோவளம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவை சரியான பாதையில் மாற்றி அமைக்க வேண்டும். கடல் சீற்றத்தின் போது தூண்டில் வளைவுகளில் சிக்கி காயம் அடையும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு மீனவர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி வருகிறது. ஆனால் தூண்டில் வளைவுகள் தரமான முறையில் அமைக்கப்படுவது இல்லை. தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். இங்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கடுமையான கடல் சீற்றம் ஏற்படும். எனவே அதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை கடற்கரை கிராமங்களில் மேற்கொள்ள வேண்டும். இந்தோனேசியா நாட்டில் கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களில் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐ.ஐ.டி. தொழில்நுட்பம்

இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசியபோது கூறியதாவது:- குளச்சல் மீன்வளத்துறை அலுவலகத்தை மாற்றுவது தொடர்பாக கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படும். குமரி மாவட்டத்தில் சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலையை பயன்படுத்தி யாரும் மீன் பிடிக்கவில்லை. எனினும் புகார்கள் வந்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் ஐ.ஐ.டி. தொழில்நுட்பப்படி தான் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏ.வி.எம். கால்வாயை குளச்சல் நகராட்சி மூலம் சீரமைக்க தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. குளச்சல் முதல் மண்டைக்காடுபுதூர் வரை ஏ.வி.எம். கால்வாய் அளவீடு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரியகாடு மீனவர் கிராமத்தில் உள்ள தூண்டில் வளைவை சீரமைத்து நீட்டிப்பு செய்ய ரூ.18.40 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. அது குறிப்புரைகளுடன் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. இந்த மதிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளபடி தூண்டில் வளைவை கூடுதலாக நீட்டிப்பு செய்ய ஐ.ஐ.டி. ஒப்புதல் பெற்ற வரைபடம் இணைக்க வேண்டியது உள்ளதால் வரைபடம் கிடைக்கப்பெற்ற பின் மீண்டும் மதிப்பீடு மற்றும் பணிக்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நிவாரணம்

கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. எனினும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து தரப்படும். கடல் சீற்றத்தினால் தூண்டில் வளைவில் சிக்கி காயம் அடைந்தவர்கள் உடனே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்து ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். தகவல் தெரிவிக்காத பட்சத்தில் நிவாரணம் பெற்று வழங்க வழிவகை இல்லை. இந்தோனேசியாவில் பலியான மீனவர் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கூட்டத்தில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், மீன்துறை உதவி இயக்குனர் மோகன், இணை இயக்குனர் காசிநாத பாண்டியன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story