பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்


பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை

175 இடங்கள்

முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றானது பக்ரீத் பண்டிகையாகும். இதனை தியாகத் திருநாள் எனவும் அழைக்கின்றனர். பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பானி என அழைக்கப்படும் இறைச்சியை 3 ஆக பிரித்து அதனை நண்பர்கள், உறவினர்கள், ஏழைகளுக்கு என வழங்கி கொண்டாடுவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி பள்ளிவாசல்கள், திறந்த வெளி இடங்கள் உள்பட மொத்தம் 175 இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சிறப்பு தொழுகை

புதுக்கோட்டையில் ஈத்கா பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் புத்தாடை அணிந்து திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதேபோல குர்பானி கொடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் சிலர் வீடுகளில் பிரியாணி சமைத்து நண்பர்களுக்கு வழங்கினர்.

அன்னவாசல்

அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, பரம்பூர், வயலோகம், குடுமியான்மலை, பெருமநாடு, புல்வயல், மாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவு துவா நடைபெற்றது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

இதேபோல் முக்கண்ணாமலைப்பட்டி பள்ளிவாசல் திடலில் திரளான முஸ்லிம்கள் ஒன்றுகூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அதில் ஊர் நன்மை, உலக நன்மை, மழை பெய்ய வேண்டியும் இறைவனிடம் துவா கேட்கப்பட்டது. முக்கண்ணாமலைப்பட்டி தவ்ஹீத் ஜமாத் சார்பில் திடலிலும், அன்னவாசல் பல்லூரணி அருகே உள்ள திடல் போன்ற இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

கீரனூர், திருவரங்குளம்

கீரனூர் பகுதி முஸ்லிம்கள் திருச்சி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதிவழியாக ஜும்மா பள்ளிவாசலை அடைந்தனர். அங்கு சிறப்பு பிரார்த்தனை செய்து, ஏழை, எளியவர்களுக்கு குர்பானி வழங்கினர்.

திருவரங்குளம், மேட்டுப்பட்டி, கைக்குறிச்சி, குளவாய்ப்பட்டி, வல்லத்திராகோட்டை, மழவராயன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசலில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

பொன்னமராவதி, ஆலங்குடி

பொன்னமராவதியில் கேசராபட்டி, இந்திராநகர், நாட்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

ஆலங்குடி ஈத்கா மைதானத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் அனைவரும் வாழ்த்துக்களை ெதரிவித்து கொண்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.


Next Story