பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை


பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 30 Jun 2023 1:00 AM IST (Updated: 30 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் நடைபெற்ற பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல்

பக்ரீத் பண்டிகை

முஸ்லிம்களின் ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திண்டுக்கல்லை பொறுத்தவரை பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. பள்ளிவாசல் இமாம்கள் உமர் மவுலானா, ரபிக்அகமது ஆகியோர் தொழுகை நடத்தினர்.

இதில் பேகம்பூர் மட்டுமின்றி திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். சுமார்3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தொழுகை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

மாவட்டம் முழுவதும்

அதேபோல் நாகல்நகர் பள்ளிவாசலில் இமாம் அப்துல்ரகுமான் தலைமையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் நாகல்நகர், சந்தைரோடு, பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதுதவிர முகமதியாபுரம், ரவுண்டுரோடு, மவுன்ஸ்புரம் உள்பட திண்டுக்கல் நகரில் அனைத்து பள்ளிவாசல்களிலும் தொழுகை நடந்தது.

மேலும் பழனி, வத்தலக்குண்டு, நத்தம், கொடைககானல், நிலக்கோட்டை, சாணார்பட்டி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

குர்பானி

இந்த பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக பலர் வீடுகளில் ஆடுகளை வளர்த்து வந்தனர். அந்த ஆடுகளை குர்பானி கொடுத்து இறைச்சியை உறவினர்கள், ஏழைகளுக்கும் கொடுத்தனர். அதேபோல் பிரியாணி சமைத்து பிறருக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story