இன்று பக்ரீத் பண்டிகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
ஈகை திருநாளான பக்ரீத் இஸ்லாமியர்களால் இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஏழை-எளியோரின் பசிதீர்த்து கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்த நாளில், "ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்; பிறகு நண்பர்கள்; அடுத்துதான் தங்களுக்கு" என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக்கொள்ளும் பண்பையும், மனிதநேயத்தையும் இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
இத்தகைய உயரிய நெறியினை கடைப்பிடித்து வரும் இஸ்லாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளை கொண்டாடி அன்பை பரிமாறிக்கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்தி கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:- சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும்; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிடவேண்டும் என்று மனதார வாழ்த்துவதோடு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில், எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- இறை தூதரின் தியாகங்களை நினைத்து பார்த்து அவருடைய வழியை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதுதான் பக்ரீத் திருநாள். இறை நம்பிக்கையும், மனிதநேயமும் பரவட்டும்; அமைதி நிலவட்டும், ஆனந்தம் பெருகட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- இறைவனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கும் இஸ்லாமியர்களின் தியாகத்தை போற்றும் திருநாளான பக்ரீத் திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பக்ரீத் திருநாள் சொல்லும் செய்தி தான் இன்று உலகம் முழுமைக்கும் தேவையான பாடமாக உள்ளது. அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்; இல்லாதவர்களுக்கு உதவுங்கள் என்ற அந்த பாடத்தை அனைவரும் புரிந்துகொண்டால் உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது; மாறாக, எங்கும் அன்பு, சகோதரத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவை மட்டுமே தழைத்தோங்கும்.
வைகோ-கமல்ஹாசன்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- உலக முஸ்லிம்கள் கொண்டாடிடும் தியாக திருநாளாம் பக்ரீத் திருநாளில் முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்:- இல்லாதோருக்கு இயன்றதை கொடுங்களென வலியுறுத்தும் தியாக திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய நண்பர்களுக்கு பக்ரீத் நல்வாழ்த்துகள்.
கே.எம்.காதர்மொய்தீன்
இதேபோல் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., காங்கிரஸ் எம்.பி.க்கள் சு.திருநாவுக்கரசர், விஜய் வசந்த், தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர்,
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப், ஜம்மியத் உலமா ஹிந்த் மாநில செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், முஸ்லிம் மக்கள் கழக நிறுவனர் ஏ.கே.தாஜூதீன் ஆகியோரும் பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.