வழியடி கருப்பண்ணசாமி கோவிலில் பாலாலய பூஜை
வழியடி கருப்பண்ணசாமி கோவிலில் பாலாலய பூஜை நடந்தது.
திருவெறும்பூர்:
திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே துவாக்குடிமலை பகுதியில் வழியடி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அப்பகுதி மக்கள் மற்றும் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மராமத்து பணிக்காக வழியடி கருப்பண்ண சாமி கோவில் விமான பாலாலயமும், விநாயகர் சிலை மற்றும் விமான பாலாலயமும் நேற்று முன்தினம் நடந்தது.
முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், எஜமான சங்கல்பம், பஞ்சகவ்ய பூஜை, கலச பூஜை, யாக வேள்விகள், பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று யாக சாலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ள முகூர்த்தக்கால் நடப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையரும், சரிபார்ப்பு அலுவலருமான ஞானசேகரன், மலைக்கோவில் செயல் அலுவலர் வித்யா, ஆய்வாளர் பானுமதி மற்றும் துவாக்குடி நகர்மன்ற தலைவர் காயம்பு உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாலாலய விழாவிற்கான பூஜைகளை சோமசுந்தர சிவாச்சாரியார், ரமேஷ் சிவாச்சாரியார், கோவில் பூசாரி ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.