ஈஸ்வரர் கோவிலில் பாலாலய நிகழ்ச்சி


ஈஸ்வரர் கோவிலில் பாலாலய நிகழ்ச்சி
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குருவிகுளம் அருகே ஈஸ்வரர் கோவிலில் பாலாலய நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

திருவேங்கடம்:

குருவிகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாயமலை பஞ்சாயத்து மேல சிவகாமியாபுரத்தில் உள்ள சிவகாமி அம்பாளுடன் காட்சியளிக்கும் உமையொருபாக ஈஸ்வரர் கோவில் மிகவும் பழமைவாய்ந்தது. இந்த கோவில் சிதிலமடைந்து பராமரிப்பற்ற நிலையில் இருந்தது. இந்த கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த வேண்டும், தினமும் பூஜைகள் நடத்த வேண்டும் என்று சாயமலை சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அந்த கோவிலை பார்வையிட்டு பின்னர் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கோரிக்கை மனு அளித்தார். மேலும் சட்டமன்றத்திலும் கோரிக்கையை வலியுறுத்தினார். இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலோடு, மேல சிவகாமியாபுரத்தில் உள்ள பழுதடைந்த கோவில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெறும் என்று அறிவித்தார்.

இதையடுத்து அந்த கோவிலில் பராமரிப்பு பணிகளுக்காகவும், கும்பாபிஷேகம் நடத்தவும் பாலாலய நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ராஜா எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், மாவட்ட பொருளாளர் சரவணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, சேர்மத்துரை, கிறிஸ்டோபர், பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Next Story