6 கிலோ ரூ.100-க்கு கூவி, கூவி விற்பனை:வரத்து அதிகரிப்பால் பல்லாரி வெங்காயம் விலை குறைந்ததுசாம்பார் வெங்காயம், இஞ்சி விலை கிடுகிடு உயர்வு
அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததின் விளைவாக, கடலூர் உழவர் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்தது. தள்ளுவண்டிகளில் 6 கிலோ ரூ.100-க்கு கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.
சமையலில் வெங்காயம்
சமையல் என்றாலே அதில் பிரதானமாக இடம்பெறும் காய்கறி என்றால் அது வெங்காயம் தான். சட்னி, சாம்பார், கூட்டு, பொரியல், அவியல் என என்ன உணவாக இருந்தாலும், உணவின் சுவையை கூட்டுவதே வெங்காயத்தின் சிறப்பு. என்னதான் மணக்க மணக்க பிரியாணி இருந்தாலும் தொட்டுக்க வைக்கப்படும் தயிர் வெங்காயம் தான் உணவையே சிறக்க செய்யும்.
இப்படி சிறப்புமிக்க வெங்காயம் அவ்வப்போது விலை உயர்ந்து மலைக்க வைக்கும். பின்னர் திடீரென விலை சரிந்து வியக்க வைக்கும். அந்த வகையில் தற்போது வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்து வியக்க வைத்திருக்கிறது.
விலை குறைந்தது
கடலூர் உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான பல்லாரி வெங்காயம், தற்போது ரூ.14-க்கு (மொத்த விலையில்) விற்பனையாகி வருகிறது. சில்லரை வியாபாரத்தை பொறுத்தவரையில் ரூ.16-க்கு வெங்காயம் விற்பனை ஆகிறது. வெளிசந்தைகளில் ரூ.18 முதல் ரூ.22 வரை விற்பனை ஆகிறது. தெருக்களில், நடமாடும் தள்ளுவண்டி கடைகளில் 6 கிலோ ரூ.100-க்கு என கூடை கட்டிய வெங்காய மூட்டையை கூவி கூவி விற்பனை செய்யும் நிலைமை இருக்கிறது. முன்பெல்லாம் ஓட்டலில் பிரைட் ரைஸ் போன்ற உணவுகளிலும், ஆம்லெட்களிலும் வெங்காயத்துடன் முட்டைகோசை கலந்து கொடுப்பார்கள். கேட்டால், 'என்ன பண்றது விலை கட்டுப்படியாகவில்லை' என்பார்கள். இப்போதெல்லாம் பரோட்டாவுக்கு கூட கடலூரில் தயிர் வெங்காயம் கொடுக்கிறார்கள்.
காரணம் என்ன?
இதுகுறித்து கடலூர் உழவர் சந்தை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் பல்லாரி வெங்காயம் சாகுபடி செய்வது குறைவு தான். அதனால் ஆந்திரா, பெங்களூரு, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், சேலம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. தற்போது அதிகளவு விளைச்சல் காரணமாக, பல்லாரி வெங்காயத்தின் வரத்தும் அதிகரித்துள்ளது.
இதனால் தான் பல்லாரி வெங்காயத்தின் விலை குறைந்து கிலோ ரூ.18 முதல் ரூ.22 வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் பல்லாரி வெங்காயத்தின் விலை குறைவு நீண்ட நாட்கள் நீடிக்க வாய்ப்பில்லை. இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் சாம்பார் வெங்காயம் விளைச்சல் குறைவால், அதன் விலை தற்போது அதிகரித்து வருகிறது. உதாரணமாக கடந்த மாதம் ரூ.40-க்கு விற்ற சாம்பார் வெங்காயம் தற்போது ரூ.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ரூ.120-க்கு விற்பனையான இஞ்சி விலை கிடுகிடுவென உயா்ந்து தற்போது ரூ.200-க்கு விற்பனையாகிறது என்றார்.
மகிழ்ச்சியும், அதிர்ச்சியும்...
தற்போது வெங்காயத்தின் விலை சரிவு காரணமாக, ஓட்டல்களை போலவே வீடுகளில் வெங்காயத்தின் நடமாட்டம் 'ஜாஸ்தி'யாகவே இருக்கிறது. இன்னும் சில நாட்கள் இந்த நிலை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வெங்காயத்தின் விலை சரிந்ததால் மகிழ்ச்சியில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு, இன்னும் சில நாட்களில் அதிர்ச்சி காத்திருக்கிறது என்பதையே அதிகாரியின் கருத்து மறைமுகமாக தெரிவிக்கிறது.