கறிக்கோழி தீவன விலை உயர்வால் பண்ணையாளர்கள் கவலை


கறிக்கோழி தீவன விலை உயர்வால்   பண்ணையாளர்கள் கவலை
x
திருப்பூர்


சோயா,மக்காச்சோளம் போன்ற கோழி தீவனங்கள் விலை உயர்வால் கறிக்கோழி பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கோழிதீவனம் விலை உயர்வு

பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் கோழி தீவனங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, பண்ணையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கறிக்கோழி பண்ணையாளர்கள் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு காலத்தில் கறிக்கோழி விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு விற்பனையை எதிர்பார்த்திருந்த வேளையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கோழி தீவனங்களின் விலை அதிகரித்தது.

ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்

கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ ரூ.35 ஆக இருந்த சோயா புண்ணாக்கு விலை தற்போது ரூ.60 ஆக விலை உயர்ந்துள்ளது. அதே போல் ஒரு கிலோ ரூ.14 ஆக இருந்த மக்காச்சோளம் தற்போது ரூ.25 ஆகவும் உயர்ந்துள்ளது. வேன், லாரி வாடகை, ஆட்கள் கூலி உள்ளிட்டவையும், 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கறிக்கோழி தீவனமான சோயா புண்ணாக்கு, மக்காச்சோளம் போன்றவை மராட்டியம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் தீவனங்கள் தொடர்ந்து விலை ஏறி வருவது கோழிப்பண்ணையாளர்களுக்கு கவலையளிக்கிறது. மேலும் கோழி தீவனங்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதால் விலையும் அதிகரிக்கிறது. எனவே தீவன ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் கோழி தீவனங்களுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான மக்காச்சோளம், கம்பு மற்றும் சோயா ஆகியவற்றை வெளி மாநிலங்களை நம்பியே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. எனவே அவைகளின் உற்பத்தியை தமிழகத்தில் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ெரயில் கட்டணத்தில் சலுகை

மேலும் ெரயில்கள் மூலம் கொண்டு வரும் கோழி தீவனப் பொருட்களுக்கு மத்திய அரசு ெரயில் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சோயா இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்து சோயா இறக்குமதியை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலம் கறிக்கோழி வளர்ப்பில் செலவுகளை கட்டுப்படுத்தி நஷ்டத்தை தவிர்க்க முடியும். மேலும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சத்தான கோழி இறைச்சியை குறைந்த விலையில் வழங்க முடியும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story