திருச்சி கோளரங்கத்தில் ரூ.40 லட்சத்தில் பலூன் விண்ணரங்கம்
திருச்சி கோளரங்கத்தில் மாணவர்கள் நலன்கருதி ரூ.40 லட்சத்தில் பலூன் விண்ணரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 30 பேர் வரை அமர்ந்து காட்சிகளை பார்க்கலாம்.
திருச்சி கோளரங்கத்தில் மாணவர்கள் நலன்கருதி ரூ.40 லட்சத்தில் பலூன் விண்ணரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 30 பேர் வரை அமர்ந்து காட்சிகளை பார்க்கலாம்.
கோளரங்கம் புதுப்பிக்கும் பணி
திருச்சி விமானநிலையம் அருகே அண்ணா அறிவியல் மைய கோளரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் விண்ணரங்கம், முப்பரிமாண படக்காட்சி (3-டி ஷோ), அறிவியல் பூங்கா, மூலிகைத்தோட்டம், சுற்றுச்சூழல் காட்சிக்கூடம் என பல்வேறு வகையான அறிவியல் சார்ந்த கட்டமைப்புகள் உள்ளன. இங்குள்ள விண்ணரங்கத்தில் விண்வெளியில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பற்றிய காட்சிகள் விளக்கத்துடன் ஒளிபரப்பப்படும்.
அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்துக்கு திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தினமும் வந்து ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கிறார்கள். கடந்த 1999-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கோளரங்கத்தை புதுப்பிக்கும் பணி ரூ.3 கோடி செலவில் தற்போது நடைபெற்று வருகிறது.
பலூன் விண்ணரங்கம்
இதன் காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் கோளரங்கம் மூடப்பட்டது. ஆனால் மாணவ-மாணவிகள் விண்ணரங்கம் குறித்து அறிந்து கொள்வதற்காக ரூ.40 லட்சத்தில் தற்காலிக பலூன் விண்ணரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த பலூன் விண்ணரங்கம் கோளரங்கத்தில் உள்ள சுற்றுச்சூழல் காட்சிக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பலூன் கூடாரத்துக்குள் 30 பேர் வரை அமர்ந்து மிரர் புரொெஜக்டர் மூலம் காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
இது குறித்து அண்ணா அறிவியல் மைய கோளரங்க இயக்குனர் அகிலன் கூறும்போது, "கோளரங்கம் புதுப்பிக்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த பணிகள் வருகிற மே மாதத்தில் முடிவடையும். அதுவரை மாணவர்களின் நலன்கருதி தற்காலிக விண்ணரங்கம் மூலம் 20 முதல் 30 நிமிட காட்சிகள் காண்பிக்கப்பட்டு வருகிறது" என்றார்.