தமிழ் மக்களின் டிஎன்ஏவில் சினிமா இருக்கு..! வாரிசு, துணிவு குறித்து அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேச்சு
பசுமைத் தாயகம் சார்பில் நொய்யல் ஆற்றை மீட்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கோவை,
கோவையில் பசுமைத் தாயகம் சார்பில் நொய்யல் ஆற்றை மீட்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,
40 ஆண்டுகளுக்கு முன் நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீரை நாம் குடிநீராக பயன்படுத்தலாம். நொய்யல் ஆற்றுக்கு கி.மு. முதலே சரித்திரம் இருக்கிறது. ஏராளமான தொல்லியல் ஆதாரங்கள் நொய்யல் ஆற்றுக்கு உள்ளது. மூவேந்தர்களும் சேர்ந்து நொய்யல் ஆற்றை பாதுகாத்துள்ளனர். நீர் மேலாண்மை திட்டங்களை மூவேந்தர்களும் சேர்ந்து நொய்யல் ஆற்றுக்கு செய்துள்ளனர். இதனை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். கொங்குக்கு மையம் நொய்யல் ஆறு. அது இன்று மாசுபாட்டாலும், பலவகையான பிரச்சனைகளாலும் மிக மோசமான நிலையில் இருக்கிறது. நொய்யல் ஆற்றை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நொய்யல் ஆற்றை காப்பாற்ற வேண்டும்.
சினிமா மூலமாகவும் இளம் தலைமுறையினருக்கு எடுத்து கூறலாம். பொன்னியன் செல்வம் இரண்டாம் பாகம் வரவிருக்கிறது. இப்போது இளைஞர்கள் மத்தியில் துணிவா? வாரிசா? என்ற வாதம் அதிகம் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் டிஎன்ஏ-வில் சினிமா ஊறி இருக்கிறது. அதனாலேயே எங்களை போன்றோர் அரசியலில் முன்னேறுவதற்கு கடினமாக இருக்கிறது. என்றார் .