6 பள்ளி பஸ்களை இயக்க தடை; அதிகாரி நடவடிக்கை
உத்தமபாளையம், போடி தாலுகாவில் 6 பள்ளி பஸ்களை இயக்க தடை விதித்து வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்தார்.
தேனி மாவட்டத்தில் தேனி, உத்தமபாளையம் என 2 பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தேனி அலுவலகம் சார்பில் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி பஸ்கள் பராமரிப்பு குறித்தும், உத்தமபாளையம் அலுவலகம் சார்பில் உத்தமபாளையம், போடி ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி பஸ்களின் பராமரிப்பு குறித்தும் ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
அதன்படி, உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், உத்தமபாளையம், போடி ஆகிய தாலுகா பகுதிகளில் இயக்கப்படும் 131 தனியார் பள்ளி பஸ்கள் கொண்டுவரப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரராமன் ஆய்வு செய்தார். அதில், பஸ்களில் அவசரகால வழி உள்ளதா? அது சரியாக இயங்குகிறதா? முதலுதவி பெட்டி பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஏறி இறங்கும் படிக்கட்டுகள், தீயணைப்பு கருவிகள் சரியாக உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் வாகனத்தில் முன்புறம், பின்புறம் பொருத்தப்பட்டுள்ள கேமரா, வேக கட்டுப்பாட்டு கருவி போன்றவை ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் பராமரிப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்ட 6 பள்ளி பஸ்களை இயக்க தடை விதித்து போக்குவரத்து அதிகாரி உத்தரவிட்டார். மேலும் பள்ளி பஸ்களை இயக்கும் டிரைவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர் அறிவுரை வழங்கினார்.