திருச்சி-கல்லணை இடையே பேருந்து செல்ல தடை...!
திருச்சி-கல்லணை இடையே பேருந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி,
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் முக்கொம்பு மேலணைக்கு வந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்படுகிறது.
இதனால் காவிரி-கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஏற்கனவே காவிரி-கொள்ளிடத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், திருச்சி உத்தமர்சீலி கிராமத்தில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் திருச்சி - கல்லணை இடையே பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி கொள்ளிடத்தில் 1.95 லட்சம் நீர்வரத்து உள்ளதால் உத்தமர்சீலி தரைப்பாலம் நீரில் மூழ்கியது.