நடிகர் விஜய்க்கு விதித்த அபராதத்துக்கு தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
புலி படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளத்தில் 15 கோடி மறைத்ததாக அவர் மீது வருமான வரித்துறை ரூ. 1.5 கோடி அபராதம் விதித்தது. அதை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக செப்டம்பர் 16ம் தேதிக்குள் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு புலி திரைப்படம் வெளியான போது விஜய்யின் வீடு, அலுவலகம், புலி படத் தயாரிப்பாளர்கள் பி.டி. செல்வகுமார், ஷிபு தமீன்ஸ், பைனான்ஷியர் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்பட்டது. அதில் புலி படக்குழுவினர் சுமார் 25 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.