வீரபாண்டி கோவில் திருவிழாவில் ராட்சத ராட்டினங்களுக்கு தடை; சிவசேனா கட்சியினர் கோரிக்கை
வீரபாண்டி கோவில் திருவிழாவில் ராட்சத ராட்டினங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குருஅய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் வந்தனர். அவர்கள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், "வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நியாயமான கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஆபத்து விளைவிக்கும் ராட்சத ராட்டினங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பெண் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களுக்கு நகரும் கழிப்பறை வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.