75.42 மெட்ரிக் டன் விதைகளை விற்க தடை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் 75.42 மெட்ரிக் டன் தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் தரமான விதைகள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தும்பொருட்டு அந்தந்த பகுதிகளை சேர்ந்த விதை ஆய்வாளர்கள், அனைத்து விதை விற்பனை நிலையங்களையும் காலாண்டிற்கு ஒருமுறை ஆய்வு செய்தும், விற்பனை செய்யப்படும் விதைக்குவியல்களில் விதை மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியும் கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 1.4.2022 முதல் 31.3.2023 வரையில் 1,245 விதை விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து, 3,366 விதை மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதில் 80 விதை மாதிரிகள் "தரமற்றவை" என பரிசோதனை முடிவு பெறப்பட்டு அவற்றின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் விதை விற்பனை நிலையங்களில் பராமரிக்க வேண்டிய கொள்முதல் பட்டியல், விதை இருப்புப்பதிவேடு, விற்பனைப்பட்டியல், பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல், பதிவுச்சான்று ஆகிய ஆவணங்கள் பராமரிக்காத 2 விதை விற்பனை நிலையங்களில் விதை விற்பனை தடை செய்யப்பட்டது.
விற்க தடை
இவ்வாறு உரிய ஆவணங்கள் பராமரிக்காதது மற்றும் தரமற்ற விதைகள் விற்பனை செய்தது ஆகிய காரணங்களுக்காக 82 விற்பனைத்தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு 75.42 மெ.டன் விதைகளின் விற்பனை முடக்கம் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.72 லட்சத்து 7 ஆயிரமாகும். மேலும் சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனரின் உத்தரவின்பேரில் தரமற்ற நெல், வீரிய கம்பு விதைகளை விற்பனை செய்த 3 தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.மேலும்நடப்பு சொர்ணவாரி பருவத்திற்கான நெல் விதைகள் விற்பனைக்கு வரப்பெற்றுள்ள நிலையில், அனைத்து விதை விற்பனையாளர்களும் உரிய ஆவணங்கள், பதிவேடுகளை முறைப்படி பராமரிக்குமாறும், தனியார் ரக விதைகளுக்கான பதிவுச்சான்று மற்றும் பகுப்பாய்வு முடிவு நகல் ஆகியவற்றை விதை வினியோகஸ்தர்களிடமிருந்து பெற்று விதை ஆய்வாளர்களின் ஆய்வின்போது ஆவணப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. விதை வாங்கும் விவசாயிகள், வெளிமாநில விதைகளை வாங்கும்போது அவை இந்த பருவத்திற்கு ஏற்றவைதானா என்பதை விவர அட்டையில் உள்ள விவரங்களை பார்த்து வாங்குவதுடன், விதைக்கிரையத்திற்கான விற்பனைப்பட்டியலை அவசியம் கேட்டுப்பெற வேண்டும். இந்த தகவலை விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.