முளைப்புத்திறன் பரிசோதனை செய்யாத விதைகள் விற்பனைக்கு தடை
முளைப்புத்திறன் பரிசோதனை செய்யாத 3,355 கிலோ மக்காச்சோளம், பருத்தி விதைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டு உள்ளது
முளைப்புத்திறன் பரிசோதனை செய்யாத 3,355 கிலோ மக்காச்சோளம், பருத்தி விதைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முளைப்புத்திறன் பரிசோதனை
விவசாயிகள், உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விற்பனை ரசீது பெற்று விதைகள் வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள், விற்பனையாளர் கையொப்பம் முதலிய விபரங்கள் இருக்க வேண்டும்.
விதைச்சிப்பத்தில் உள்ள விவர அட்டையில் குறிப்பிடப்பட்ட பயிர், ரகம், காலாவதி நாள் உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து பின்னர் வாங்க வேண்டும். நெல் மற்றும் உளுந்து பயிர்களில் விதைச்சான்று மற்றும் அங்கச்சான்றுத் துறையின் சான்றட்டை பொருத்திய விதைகளை வாங்குவது சிறந்தது.
விவசாயிகள் தங்களிடம் உள்ள சொந்த நெல் மற்றும் உளுந்து விதைகளை பயன்படுத்தும் முன்னர் விதைகளின் மாதிரிகளை நெல்லை விதை பரிசோதனை நிலையத்தில் மாதிரி ஒன்றுக்கு கட்டணம் ரூ.80 செலுத்தி முளைப்புத்திறன் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
3,355 கிலோ விதைகள் விற்பனைக்கு தடை
தென்காசி மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி விதைகள் விதை விற்பனை நிலையங்களுக்கு தற்போது வரப்பெற்றுள்ளது. திருவேங்கடம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் 14 விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பதிவுச்சான்று மற்றும் முளைப்புத்திறன் பரிசோதனை அறிக்கை பெறப்படாத 3,355 கிலோ மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து விதை குவியல்களிலும் விதை மாதிரி எடுக்கப்பட்டு, முளைப்புத்திறன் பரிசோதனைக்கு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.