தஞ்சை பெரியகோவிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை
தஞ்சை பெரியகோவிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
தஞ்சை பெரியகோவிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் இல்லாத பகுதி
தஞ்சை பெரியகோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பகுதியாக அறிவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் ஆகியவை சார்பில் நேற்றுகாலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி, நெகிழி (பிளாஸ்டிக்) இல்லா பகுதி என எழுதப்பட்டிருந்த பதாகையை திறந்து வைத்தார்.
இதையடுத்து அவர், மாணவ -மாணவிகளுக்கு சாக்குபைகளை வழங்கி, பெரியகோவில் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தால் அதனை சேகரித்து பாதுகாப்பான இடத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். சாக்குப்பைகளை பெற்று கொண்ட 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பெரியகோவில் முன்பகுதி மற்றும் வாகன நிறுத்துமிடம் முழுவதும் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
விழிப்புணர்வு
மேலும் கலெக்டர், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தமிழகஅரசு அறிவித்துள்ள மீண்டும் மஞ்சப்பை, துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கும்போது துணிப் பைகளை கொண்டு செல்ல வேண்டும் என்று மாணவ- மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. வணிக நிறுவனங்களிலும் ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.
300 மீட்டர் சுற்றளவு
தஞ்சை பெரியகோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்திய தொல்லியல் துறையின் விதிமுறைப்படி 300 மீட்டர் சுற்றளவுக்கு பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாகப் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுபோல, மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதற்கு பொதுமக்களும், மாணவர்களும் அரசு எடுக்கும் முயற்சிக்கு ஆதரவு தர வேண்டும்.
பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் பெரிய நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரமும், துணிக்கடைகளுக்கு ரூ.10 ஆயிரமும், பல சரக்கு கடைகள், மருந்துக் கடைகள் உள்ளிட்ட நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1,000-மும், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் முதல் முறை அபராதமாக விதிக்கப்படுகிறது. அடுத்த முறை பயன்படுத்தினால் அபராதம் இரட்டிப்பாக விதிக்கப்படும். அபராதம் விதிக்கும் நிலை அல்லாமல், அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டால்தான் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சித்ரா, மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன், போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், செஞ்சிலுவை சங்க துணைத் தலைவர் முத்துக்குமார், டாக்டர் சிங்காரவேலு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.