மழையுடன் வீசிய காற்றில் வாழைகள், மின்கம்பங்கள் சாய்ந்தன
ஆற்காடு பகுதியில் பெய்த மழையால் வாழைகள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்்தன.
ஆற்காடு
ஆற்காடு பகுதியில் பெய்த மழையால் வாழைகள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்்தன.
கடைகள் மூடல்
ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 'மாண்டஸ்' புயல் காரணமாக நேற்று முன்தினம் மாலையில் இருந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
தொடர் மழையால் குளிர் காற்று வீசத் தொடங்கியது. விடிய, விடிய பெய்த தொடர் மழை நேற்று காலையும் தொடர்ந்ததால் ஆற்காடு பகுதியில் டீக்கடைகள், ஓட்டல்கள், பங்க்கடைகள் திறக்கப்படாமல் மூடியே கிடந்தன.
பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மதிய வேளையில் சுமார் ஒரு மணி நேரம் மழையின்றி காணப்பட்டன. அந்த நேரத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிச்சென்றனர்.
பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் ஆற்காடு பைபாஸ் சாலை தனியார் கல்லூரி அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. அதனை ஆற்காடு நகர போலீசார் அப்புறப்படுத்தினர்.
திமிரியை அடுத்த மோசூர் கிராமத்தில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை குலை தள்ளியிருந்தன. மழையுடன் வீசிய காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வாழை மரங்கள் சாய்ந்தன.
அதேபோல் ஆற்காட்டை அடுத்த மேலகுப்பம் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த 150 வாழை மரங்களும், அரப்பாக்கம் கிராமத்தில் 400 வாழை மரங்களும் சாய்ந்தன.
மின்கம்பங்கள் சாய்ந்தன
ஆற்காட்டை அடுத்த சாம்பசிவபுரம் கிராமத்தில் குமரவேல் என்பவருக்கு சொந்தமான தென்னை மரம் விழுந்து வீட்டின் மின் இணைப்பு கம்பங்கள் 3 சாய்ந்தன. இதுகுறித்து மின்சார துறைக்கு தகவல் தெரிவித்தனர் இதனால் உயிர் சேதம், பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி உள்வட்டத்தை சேர்ந்த கீராம்பாடி கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் ஒன்று வேருடன் சாய்ந்தது. இந்த மரம் பொக்லைன் எந்திரம் மூலம் உடனடியாக அகற்றப்பட்டது.